ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை மீட்ட ஈராக் ராணுவம்

318 0

தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை, ஐஎஸ். பயங்கரவாத அமைப்பினரிடம் இருந்து ஈராக் ராணுவம் மீட்டு விட்டது.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோட்டையாக திகழ்ந்து வந்த மொசூல் நகரம், கடந்த ஜூலை மாதம் ஈராக் படையினரால் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நினிவே மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து வந்த கடைசி நகரமான தால் அபாரையும் மீட்டெடுப்பதற்காக ஈராக் ராணுவம் வரிந்து கட்டியது.அங்கு தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வந்தது.

அந்த தாக்குதலை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி தால் அபாரில் தரை வழி தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. அப்போது ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி டி.வி.யில் தோன்றிப் பேசியபோது, “தால் அபார் நகரை விடுவிப்பதற்கான தரைவழி தாக்குதல் தொடங்கி விட்டது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். ஒன்று சரண் அடையுங்கள். இல்லாவிட்டால் செத்து மடியுங்கள். இதைத் தவிர வேறு வழியில்லை” என ஆவேசமாக முழங்கினார்.

அதன்படி அங்கு கடந்த ஒரு வார காலமாக உக்கிரமான சண்டை நடந்து வந்தது.இந்தநிலையில் தால் அபார் நகரின் பெரும்பான்மையான பகுதிகளை ஈராக் ராணுவம், ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்து விட்டது.இது பற்றி ஈராக் கூட்டு ராணுவ கட்டளை செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா ரசூல் கூறுகையில், “தால் அபார் நகரைப் பொறுத்தமட்டில் 60 சதவீத செயல்பாட்டு பகுதிகளையும், சிட்டி சென்டரின் 90 சதவீத பகுதியையும் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு விட்டது” என்று குறிப்பிட்டார்.

தால் அபார் நகர தாக்குதல் பிரிவின் தளபதி அப்துல் அமிர் யாரல்லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “அல் அஸ்காரி, அல் சேனாவின் அல் ஷமாலியா, அல் மாரெட், பாவபாத் தால் அபார் மாவட்டங்கள், அல் ரஹாமா கிராமம் ஆகியவற்றை ராணுவம் மீட்டெடுத்து ஆகி விட்டது. தால் அபாரை பொறுத்தமட்டில் அல் அயதேயா மாவட்டம் மற்றும் சில கிராமங்கள் அவர்கள் வசமுள்ளன. அவற்றையும் மீட்டெடுக்க வேண்டும். அந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்காக ஈராக் ராணுவத்தின் 15-வது, 16-வது படைப்பிரிவுகள் தற்போது அங்கு முன்னேறி செல்கின்றன” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “தால் அபாரின் மையப் பகுதிகளான தி சிட்டாடல், அல் பசாட்டின் பகுதிகளில் ஈராக் கொடியை பயங்கரவாத தடுப்பு படையினர் ஏற்றி உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஈராக்கில் தால் அபார் நகரமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக வீழ்ந்துவிட்டால், ஹாவிஜா, அனா, அல் காயிம் ஆகிய நகரங்கள் மட்டுமே அவர்களின் பிடியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment