ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் புழல் கைதிகள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரத்தை சேர்ந்தவர் முருகேசன் (46). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
மாதவரம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முருகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முருகேசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
பெசன்ட்நகரை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவரை சாஸ்திரி நகர் போலீசார் அடிதடி வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாக ஜெயிலில் இருந்த நாகராஜனுக்கு நேற்று இரவு 8 மணியளவில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜன் உயிரிழந்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து சிறை கைதிகள் 2 பேர் உயிரிழந்தது சககைதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயிலர் ஜெயராமன், புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

