20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஒருவாரத்தில் நியமனம் – செய்தி வெளியிட்டது அரச ஊடகம்

375 0

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உதவியாளர் நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நியமனத்துக்கான விண்ணப்பங்கள் கோரலின் முடிவுத்திகதி 08.09.2017 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளமான news.lk இல் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் விபரங்களுக்கு அமைவாக குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய 20 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
இவர்கள் பிரதேச செயலக அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அரசாங்கத்தின் பொருளாதார வலய வேலைத்திட்டத்தை பிரதேசமட்டத்தில் அமுலாக்குவது நியமனம் பெறுவோரின் பிரதான பணியாக அமையும். – என்றுள்ளது.

Leave a comment