புதிய போர்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகை: அதிகாரிகள் வரவேற்பு

312 0

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ்.ஷாரியா என்ற புதிய போர்கப்பல் கோவாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்தது.

பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ்.ஷாரியா என்ற புதிய போர்கப்பலை கடந்த 12-ந்தேதி கோவாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கடலோர காவல் படையில் இணைத்து வைத்தார்.

இந்த கப்பல் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு பிராந்தியத்தின் கீழ் செயல்பட உள்ளது. இதற்காக இந்த கப்பல் கோவாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்தது. சென்னை துறைமுகத்தில் புதிய கப்பலுக்கு கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி., தல்கா தலைமையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக வருகை தந்துள்ள கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நவீன போர்க்கருவிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக்கப்பல் 23 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment