எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்: தி.மு.க.

213 0

எடப்பாடி பழனிசாமி அரசு மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கவர்னர் மராட்டியத்திற்கு சென்றுவிட்டார்.

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருந்து, அவர்களின் உத்தரவை பெற்று கவர்னர் செயல்படுவது போல் இருக்கிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மனுவை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.

மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக கவர்னரின் செயல்பாட்டையும் மக்கள் மத்தியில் நாங்கள் எடுத்து செல்வோம்.தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வராது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மற்றவர்கள் கொண்டு வரும் பட்சத்தில், தி.மு.க. அப்போது உரிய முடிவை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment