டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது – சி.வி.

320 0

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தாவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் தமது முடிவை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த தீர்மானம் குறித்து டேலோவினால் பரிந்துரைக்கப்பட்ட விந்தன் கனகரத்தினத்துக்கும் முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுப் பதவிக்கு தொழில் ரீதியாக உரிய தகைமையுடையவரே பொருத்தமானவர் என்பதால், டெலோவின் உறுப்பினரான வைத்தியர் குணசீலனை அந்த அமைச்சுப் பதவிக்கு நியமிக்க தாம் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தமது பொறுப்பில் உள்ள போக்குவரத்து அமைச்சில் தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு விந்தன் கனகரத்தினத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் முதலமைச்சரின் இந்த முடிவை ஏற்க முடியாது என டெலோ தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ந. ஸ்ரீகாந்தா கடிதமொன்றினூடாக முதலமைச்சரிடம் இதனை அறிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமன விடயத்தில், தமது கட்சியின் பரிந்துரைக்கு மாறாக, தமது கட்சியைச் சேர்ந்த இன்னொருவரை தேர்ந்தெடுத்திருந்தாலும், அதனை தமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஸ்ரீ காந்தா கூறியுள்ளார்.

தம்மால் பிரேரிக்கப்படுபவர் தொடர்பில், ஏதாவது கருத்து இருக்குமாயின், அதனை தெரிவித்திருந்தால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து அந்த நியமனத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமது கட்சியின் பெயரில் முதலமைச்சரின் தெரிவாக எவரையும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ள தாம் தயாரில்லை என டெலோவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் சார்பில் ஒருவரை முதலமைச்சரே தேர்ந்தெடுத்து அமைச்சராக்குவது, அந்த நியமனத்தை தம்மீது பலவந்தமாக திணிக்க முயற்சிப்பதாகவே அமையும்.

எனவே, இதனை ஒருபோதும் தம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அனுமதிக்கவும் முடியாது.

தமது கட்சிக்குள்ள சுயமரியாதை எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்துக்காகவும், தாம் விட்டுக்கொடுக்க போவதில்லை என்றும் ஸ்ரீ காந்தா உறுதியாக கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் தவறை நிவர்த்தி செய்ய முதலமைச்சர் முன்வரவேண்டும்.

இதுவே வடமாகாண சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அவசியமானது என்றும் ஸ்ரீ காந்தா வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment