ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு – இன்று அறிவிக்கிறார்

222 0

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி மூலம் இன்று அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலீபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அரசு படைகளிடம் ஒப்படைத்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து படிப்படியாக நாடு திரும்பி வருகின்றனர்.

தற்போது அங்கு சுமார் 8,400 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் 15 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்தாலும், அரசு படைகளால் தலீபான்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. 60 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகள் மட்டுமே அரசு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அங்கு மீண்டும் தலீபான்கள் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தினால் அது அமெரிக்காவுக்கு ஆபத்தாக விளையும் என அமெரிக்க உளவு நிறுவனங்கள் கவலையில் உள்ளன. எனவே அங்கு அமெரிக்க படைகளை அதிகரிக்க வேண்டும் என அவை கருதியுள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் மூத்த அதிகாரிகளுடன் கடந்த 18-ந் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை அதிகரிப்பதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இந்த முடிவு குறித்து தொலைக்காட்சி மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.

Leave a comment