தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம்: அதிபர் டிரம்ப் ஆவேசம்

305 0

தீவிரவாத அமைப்புகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான தங்களது கொள்கைகள் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சியில் டிரம்ப் உரையாற்றினார்.
அந்த உரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு படைகளை வாபஸ் பெறுவது, இந்தியா உடனான உறவு, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுப்பது உள்ளிட்ட விவகாரம் குறித்து பேசினார்.
டிரம்ப் உரையில் பேசியதாவது:-
பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் சொற்க பூமியாக திகழ்ந்து கொண்டிருந்தால், எங்களால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியாது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலை உடனடியாக மாற வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி வரும். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அமைதிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பவேண்டிய நேரம் இது.
ஆப்கானிஸ்தானில் நாங்கள் மேற்கொண்டு வரும் வளர்ச்சி நடவடிக்கைகளில் கூட்டு சேர்ந்தால் பாகிஸ்தானுக்கு அதிக பலன் பெற முடியும்.
இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. போர் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியில் உயர்த்த இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

Leave a comment