அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி-ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்

227 0

அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழா தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (23-ந்தேதி) அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

விழாவுக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்குகிறார். மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பி துரை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா எஸ். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தினை திறந்து வைத்து, ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.

விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினர் செய்துள்ளனர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பொது மக்கள் பார்வையிடும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று விழா நடைபெறும் இடம் மற்றும் அரியலூர் நகரின் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்- தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வர்-துணை முதல்வர் வருகையையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment