சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்

289 0

201608140722232188_Independence-Day-celebration-tomorrow-Chennai_SECVPFசென்னை கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்திய சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்று கிறார்கள்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக நாளை காலை 9.10 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ஜெயலலிதா புறப்படுகிறார்.

வரும் வழியில் போர் நினைவுச் சின்னத்தில் அவர் மலர் வளையம் வைத்து, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து, போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ கோட்டைக்கு வருகிறார்.

கோட்டை முன்பு அவரை தலைமைச் செயலாளர் பா.ராம மோகன ராவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார். பின்னர் மரபுப்படி, தென் பிராந்திய ராணுவ தலைமைப் படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை தளபதி, தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்- ஒழுங்கு), சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்- அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்வார்.

பின்னர் அவர் திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.

அதன்பிறகு 9.29 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருவார். 9.30 மணிக்கு அங்குள்ள பிரமாண்டமான கொடி கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியை முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுவார். கொடியை ஏற்றி வைத்து சல்யூட் அடித்து வணக்கம் செலுத்துவார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும்.

அந்த நேரத்தில் போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர், தேசிய கீதத்தை இசைப்பார்கள். அதைத்தொடர்ந்து கொத்தளத்தில் இருந்தபடி, சுதந்திர தின உரையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிகழ்த்துவார். அப்போது சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரிலான விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேர்வு செய்யப்பட்டவருக்கு கொத்தளத்தில் வைத்து அந்த விருதை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார். அதைத் தொடர்ந்து துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத்திறனாளிகள் நலன் விருது, மகளிர் நலன் விருதுகள், சிறந்த மின் ஆளுமைக்கான அரசு ஊழியர் – அரசுத்துறை விருது உள்ளிட்ட பல விருதுகளை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார்.

பின்னர் விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத்தொடர்ந்து, அங்கிருக் கும் குழந்தைகளுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா இனிப்புகள் வழங்குவார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வார்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் அமருவதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே பந்தல்கள் போடப்பட்டு உள்ளன. தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐகோர்ட்டு மற்றும் கீழமை கோர்ட்டு நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னை நகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பார்வையாளர்களுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்துகிறார்கள். லாட்ஜூகளிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.