டெனீஸ்வரனுக்கு பதில் விந்தன் கனகரத்தினம் – டெலோ பரிந்துரை

5591 0

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு பதிலாக, விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது.

கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா இதனை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சரவை மாற்றத்துக்கு ஒத்துழைக்கும் வகையில், பதவி விலகுமாறு டெலோ இயக்கம் தொடர்ச்சியாக டெனீஸ்வரனை கோரி வந்தது.

எனினும் அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றையதினம் ஒன்று கூடிய டெலோ இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டத்தின் போது, டெனீஸ்வரனின் கட்சி அடிப்படை உரிமையை ஆறு மாதங்களுக்கு தற்காலிமாக ரத்துசெய்வதற்கு டெலோ இயக்கம் தீர்மானித்தது.

முதலமைச்சருக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டமை உள்ளிட்ட கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, டெனீஸ்வரனை பதவியில் இருந்து விலக்கி, அவருக்கு பதிலாக விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு டெலோ இயக்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பான கடிதம் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாக என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் புதிய அமைச்சரை முதலமைச்சர் நியமிப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment