அ.தி.மு.க. வழிகாட்டு தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் – எடப்பாடி பழனிசாமி துணைத்தலைவர்

368 0

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடன்பாட்டில் கட்சியை வழி நடத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழிகாட்டு தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடன்பாட்டில் கட்சியை வழி நடத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது கட்சி பெயர், சின்னம் ஆகியவை தேர்தல் கமி‌ஷனால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பெயர் சின்னத்துக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு அறிவிக்கப்பட்ட பின்பு அதைக் காட்டித்தான் இரு அணியினரும் கட்சி பெயர் சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறுகிறார்கள். அதன் பிறகு தான் தேர்தல் கமி‌ஷன் கட்சி பெயர், சின்னம் முடக்கி வைத்ததை விலக்கிக் கொள்ளும். இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள காலஅவகாசம் பிடிக்கும்.

எனவே அதுவரை கட்சியை நடத்த வழி காட்டும் குழு அமைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மொத்தம் 6 நிர்வாகிகள் வரை இருப்பார்கள். இரு அணிகளையும் சேர்ந்தவர்கள் குழுவில் இடம் பெறுவார்கள்.

வழி காட்டுதல் குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள். இது கட்சியின் தலைமை பொறுப்பு போல் ஆகும். அவர்தான் அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்வார்.

ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. அதில் அவருக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும்.

அவரது அணியைச் சேர்ந்த கே.பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். யார்-யாருக்கு என்னென்ன இலாகா என்பதும் முடிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்மலை ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் 2001-04-ல் சுகாதாரம் மற்றும் கல்வித் துறை மந்திரியாக இருந்தவர். ஓ.பன்னீர் செல்வம் அணி பக்கம் செல்லும்வரை கே.பாண்டியராஜன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். எனவே அவர்களுக்கு மீண்டும் என்னென்ன இலாகா வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

தொழில் துறை, சுகாதாரம், வீட்டு வசதி போன்ற துறைகளை ஒதுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி கூடுதலாக பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளை கவனித்து வருகிறார். இந்த இலாகாக்கள் பிரித்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

தினகரன் ஏற்கனவே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அதே போல சசிகலாவை ஓரம் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சசிகலா சிறையில் இருப்பதால் அவரை நிர்வாக ரீதியாக அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ யாரும் சந்தித்து ஆலோசனை பெறுவதில்லை. இதுபற்றி முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது.

நாளை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Leave a comment