அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 12 ஆக குறைந்தது

1796 0

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டதால் தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலம் 12 ஆக குறைந்தது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பின் ஒரு பகுதியாக டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதமானது. அவர் நியமித்த நிர்வாகிகள் செல்லாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேலூரில் பொதுக் கூட்டத்தை நடத்தி டி.டி.வி. தினகரன் தனது பலத்தை வெளிப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு விட்டது. நாளை எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிகள் இணைகின்றனர்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரன் கடும் கொந்தளிப்பில் உள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தது. 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

செந்தில்பாலாஜி, பழனியப்பன், பாலசுப்பிரமணி, பி.வெற்றிவேல், ஓட்டபிடாரம் ஆ.சுந்தரராஜ், சாத்தூர் சுப்பிரமணியம், டாக்டர் எஸ்.முத்தையா, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, தஞ்சாவூர் எம்.ரங்கசாமி, நிலக் கோட்டை தங்கதுரை, பூந்தமல்லி ஏழுமலை, திருப்போரூர் கோதண்ட பாணி ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. தங்கள் அணிக்கு மேலும் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற என்னென்ன வியூகம் வகுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.சட்டசபையில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வருகிற 23-ந்தேதி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலூரில் கூட்டியதை விட மிக அதிகமான கூட்டத்தை சென்னையில் கூட்ட வேண்டும் என்று ஆதரவாளர்களிடம் தினகரன் கேட்டுக் கொண்டார்.

22 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் தங்களிடம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால் தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டதால் தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் குறைந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a comment