மின்சாரம் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

725 43

மின்சாரம் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் 19.8.2017 அன்று ஏற்பட்ட மின் விபத்தில், புலியக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணியரசன் மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மின் விபத்தில் உயிரிழந்த மணியரசன் மற்றும் கருணாநிதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் விபத்தில் சத்தியராஜ் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சத்தியராஜ் என்பவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணை நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தியராஜிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மணியரசன், கருணாநிதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்த சத்தியராஜிக்கு 50,000ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a comment