மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் – நிதியுதவி அறிவிப்பு

831 0

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றதையொட்டி அம்மாப்பேட்டையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல இடங்களில் விளம்பர தட்டி போர்டு வைத்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று அம்மாப்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே டிரான்ஸ்பார்மர் அருகில் ஒரு தட்டி போர்டை அமைக்கும் பணியில் புளியக்குடி கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மணியரசன் (வயது 27), கர்ணன் (45), சத்தியராஜ் (27) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது அந்த விளம்பர போர்டு எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது.
இதனால் சாரத்தில் நின்றிருந்த மணியரசன், கர்ணன், சத்தியராஜ் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அம்மாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மணியரசன், கர்ணன் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த சத்தியராஜ் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

Leave a comment