இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவுக்கு கொடுத்த ‘அடி’யின் தடயங்கள் பசுபிக் பெருங்கடலில் கண்டெடுப்பு

282 0

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பலின் சிதைந்த சில பாகங்கள் பசுபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் வரைபடத்தை மாற்றியதில் இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய பங்கு உண்டு. ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லர் பற்ற வைத்த தீ, ஜப்பானின் இரண்டு நகரங்களில் அணுகுண்டு விழுந்து லட்சக்கணக்கானோர் மாண்டு வீழும் வரை அணையாமல் இருந்தது.

இரண்டாம் உலகப்போர் சண்டைகள் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே ஆட்டம் கண்டிருந்த போது, அமெரிக்கா கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி தான் இருந்தது. ஆனால், ஜப்பான் எனும் வில்லன் தன்னுடைய தன்மானத்தை சீண்டிய பின்னர், அமெரிக்கா காட்டிய கோர முகம் வரலாற்றின் எச்சங்களில் இன்னமும் உள்ளது.

ஜப்பானின் போர் விமானங்கள் அமெரிக்காவின் பியர்ல்ஸ் துறைமுகத்தை தாக்கிய பின்னர் தான் அந்நாடு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மூன்றும் இணைந்து ஹிட்லர், முசோலினி படைகளை ஒரு பக்கம் பதம் பார்க்க, தன்னுடைய தன்மானத்தை சீண்டிய ஜப்பான் மீது அமெரிக்காவுக்கு தனி கவனம் இருந்தது.

அந்த தனி கவனம் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் நாசக்கார அணுகுண்டுகளை வீசும் வரையில் அமெரிக்காவுக்கு குறையவில்லை. இந்த அணுகுண்டு வீச்சுக்கான முக்கிய தளவாடங்களை இண்டியானாபோலிஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல் ஜப்பானில் இறக்கிவிட்டு பசுபிக் பெருங்கடலின் வழியே வரும் போது தான் அந்த தாக்குதல் நிகழ்ந்தது.

1945-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பசுபிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த இண்டியானாபோலிஸ் போர்க்கப்பலை குறிவைத்து ஜப்பான் நீர்மூழ்கிக்கப்பல் வீசிய கண்ணிவெடி ஏவுகணைகள், போர்க்கப்பலை 12 நிமிடங்களில் மூழ்கடித்தது. கப்பலில் இருந்த அமெரிக்கர்கள் 1200 பேரில் வெறும் 316 பேர் தான் உயிருடன் மீட்கப்பட்டனர். அதுவும், ஐந்து நாட்களுக்கு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதால் பசி, வெயில், சுறா மீன் கடி போன்றவற்றால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்தாண்டு இந்த போர்க்கப்பலின் எச்சங்களை தேடி அமெரிக்காவிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்குழு கிளம்பியது. கப்பல் மூழ்கியதாக கருத்தப்படும் கடல் பரப்பளவில் ஒரு அங்குலம் கூட விடாமல் இந்த குழு ஆராய்ந்து பார்த்ததில் தற்போது சிறிய முன்னேற்றம் கிடைத்துள்ளது.

சிதைந்து போன கப்பலின் சில பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், ஒரு மூழ்கிய கப்பலின் சிதைந்த பாகங்களை வைத்து கப்பலின் பெயரை கண்டறிவது கடினம் என ஆராய்ச்சி குழுவின் தலைவர் பால் ஆலன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்பகுதியில் ஆராய்வதால் வேறு சில பாகங்கள் கிடைக்கும் பட்சத்தில் அது இண்டியானாபோலிஸ் போர்க்கப்பலின் பாகங்கள் தான் என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஆலன் கூறியுள்ளார்.

கிடைத்த பாகங்கள் இண்டியானாபோலிஸ் கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், 1945 விபத்தில் தப்பி உயிர்பிழைத்து தற்போது வரை வாழ்ந்து வரும் 22 பேரை கவுரவிக்கும் திட்டம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

Leave a comment