தமிழ் – சிங்கள உறவுகளின் சிதைவு என்பது பொய்யில் இருந்தும் புனைவில் இருந்தும் ஏற்பட்டது!

190 0

தமிழ் – சிங்கள உறவுகளின் சிதைவு என்பது பொய்யில் இருந்தும் புனைவில் இருந்தும் ஏற்பட்டது தான். இதில் பலரதும் பங்களிப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஊடகங்களின் வகிபங்கு அதிகமானது.

மனித வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இயற்கையானது. ஆனாலும் உண்மை, நேர்மை, தர்மம் இதற்காகக் குரல் கொடுப்பதற்கு எவ ரும் பின்னிற்கக் கூடாது.

அவ்வாறு யாரேனும் பின்னிற்பார்களாயின் அதுவே அநீதி பிறப்பெடுப்பதற்கு; அதர்மம் தழைத்தோங்குவதற்கு; பொய்யும் புரட்டும் பரவுவதற்கு அடிப்படையாகி விடும்.

உண்மையை உண்மை என்று சொல்லாமல் மறைப்பது மகா பாவம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந் தலைவர் காமராஜர் தன் அரசியல் எதிரிகளைக் கூடத் தனது ஆதரவாளர்கள் இழிவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டாராம்.

இந்தப் பெருந்தன்மை இல்லை என்றால், எங்கள் இளம் சந்ததி; மாணவ சமூகம் எங்ஙனம் அற நீதியில் தங்கள் வாழ்வை அமைக்க முடியும்.

இப்போதெல்லாம் பாடசாலைகளில், உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்கள் ஒற்றுமை பற்றி, நல்வழி பற்றி மாணவர்களுக்கு மிகச்சிறப்பாக எடுத்துரைப்பார்கள்.

ஆனால் அவர்கள் இம்மியும் தங்களின் உரையை கடைப்பிடித்திருக்க மாட்டார்கள். பேசுவதென்பது வெறுமையானதல்ல. அது செயலுருவில் கொண்டு வரப்பட வேண்டியது.

எனவே வாழ்க்கையில் முன்மாதிரியாக நடந்து காட்டியவர்கள் பேசுகின்ற போதே மாணவர்கள் அதை அங்கீகரிப்பர்.

இதைவிடுத்து செய்வதெல்லாம் உருட்டும் புரட்டும். ஆனால் பேச்சு மட்டும் கொல்லாமை, புலால் உண்ணாமை, தர்மம், நீதி, அறம் என்ப தாக இருந்தால் அங்கிருந்து தான் பொய் ஆரம்பிக்கிறது.

எனவே என்னதான் கஷ்டம், நஷ்டம் வந்தாலும் உண்மையைப் பேச வேண்டும்.என் எதிரி என்பதற்காக அவர் மீது அபாண்டமான பழி சுமத்தும் போதும் நாம் பேசாமல் இருப்பது கூட அபத்தமானது.

ஆகையால் உண்மையைப் பேசுவதில் எவரும் தயங்கக்கூடாது. இந்த வகையில் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போனோம்.

முன்னாள் போராளிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர் என்ற உண்மையை இராணுவத் தளபதி துணிந்து கூறியிருப்பதானது தமிழ் மக்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக எதையெல்லாம் சொல்ல முடியுமோ அதையெல்லாம் கூறி அரசிடமும் பேரினவாதிகளிடமும் நல்ல பெயர் பெற்ற தளபதிகளும் அரசியல் வாதிகளையும் தான் தமிழ் மக்கள் சந்தித்தனர்.

ஆனால் இன்றைய இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, எந்தவித பக்கச்சார்புமின்றி துணிச்சலோடு ஓர் உண்மையைக் கூறியுள்ளார். அதுதான் முன்னாள் போராளிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர் என்பது.

அது மட்டுமல்ல வடக்கில் சில சம்பவங்கள் நடந்தால், அதனைத் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்துவோர் அந்தச்சம்பவம் தெற்கில் நடந்தால் அதைக் கவனிப்பதேயில்லை என்ற யதார்த்தத்தையும் கூறியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, யாழ்ப்பாணத்தில் நடக்கும் அசாதாரண சம்பவங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு உண்டு என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறிய நிலையில்,

இராணுவத்தளபதி உரைத்த உண்மை அப்பாவிகளான முன்னாள் போராளிகளுக்கு பெரு நன்மையாக அமையும்.

Leave a comment