பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 40 வருடகாலமாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதை முன்னிட்டு, நாளையை காணும் ரணில் என்ற புகைப்படக் கண்காட்சி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.
இதில் உரையாற்றும் போது சந்திரிக்கா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராவதற்கு விருப்பம் தெரிவித்ததை தாம் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாகவும், அது குறித்த 2 மணி நேரம் தீவிரமாக ஆராய்ந்தப் பின்னர் அது குறித்து மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
அந்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
ஆனாலும் தம்மை முன்னிலைப்படுத்தாமல், நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக முன்னிறுத்துவதாக ரணில்விக்ரமசிங்க அறிவித்தார்.
இந்த அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போதைய மிகப்பெரிய இலக்கை அடையமுடிந்துள்ளது என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

