சசிகலாவின் காலில் விழுந்து பதவியை பெற்றவர் திண்டுக்கல் சீனிவாசன் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா-தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிகள் இணைவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடிவருகிறார்.
மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காட்டமாக பேசிய தினகரன் தொண்டர்களின் நலன்படி செயல்பட்டு திருந்த வேண்டும்.
இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்றும் தினகரன் கூறினார்.
இந்த நிலையில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நான் ஏற்கனவே கூறியபடி, தலைமை கழகத்தில் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், பொதுச் செயலாளருக்கு எதிராகவும் தீர்மானம் போட்டிருப்பதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தொண்டர்களை திசை திருப்பி கொல்லைப்புறம் வழியாக கட்சியை கைப்பற்ற சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்.
இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திரும்ப திரும்ப செய்யக்கூடாது. சரியான வழியில் வேலை செய்ய வேண்டும். அமைச்சர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள்.
அம்மா காட்டிய வழியில் கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும். இதைத்தான் தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
அப்படி செயல்படாமல் வேறு வழியில் கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது அமைச்சர்களுக்கு ஆபத்தாகவே முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

