கோராக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேஸ் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
உத்தரபிரதேஸ் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியான 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பெரும்பாலான குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுமாறு அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச டி.ஜி.பி. சுல்கான் சிங்கிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘கிருஷ்ண ஜெயந்தி மிகவும் முக்கியமான பண்டிகை. காவல்துறையினர் இதற்காக பாரம்பரிய முறையில் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை ஆம் ஆத்மி கட்சி உடனடியாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஷ்வரி கூறுகையில், ‘இது ஆட்சியில் உள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இவ்வளவு பெரிய சோகமான சம்பவம் நடைபெற்றபோதுகூட தங்களது கொள்கைகளை கொண்டு செல்கிறார்கள்’ என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

