ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இன்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை மதிய போசன விருந்துபசாரத்திற்கு அழைத்துள்ளார். இந்த மதிய போசனத்தை அடுத்து இடம் பெற்ற கூட்டத்திலேயே ஜனாதிபதியை இன்று சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைத்து அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒன்றாக தேர்தலை நடத்துவதற்கான 20 ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை கடந்தவாரம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிறிலங்கா சுந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழுக்கூட்டத்தில் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பில் மாகாணசபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான காலம் தொடர்பிலும் இரு தேர்தல்களை நடத்தும் விடயம் தொடர்பான சட்டமூலங்கள் குறித்தும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைவிட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. வழிநடத்தல் குழுவில் கட்சியின் உறுதியான நிலைப்பாடு இன்னமும் தெரிவிக்கப்படாத நிலையில் காலம் கடத்தப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பிலான ஜனாதிபதியின் நிலைப்பாட்டையும் இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கேட்டறியவுள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறன்றது.

