வவுனியாவில் அதிவேக புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

430 0

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை அதிவேக புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரதப் பாதையில் பாதுகாப்பு கடவையை நிறுவுமாறு கோரி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கி இன்று காலை பயணித்த கடுகதி புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றையதினம் மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் புகையிரதக்கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில், தாண்டிக்குளம் புகையிரதக்கடவையில் பாதுகாப்பு மின் விளக்குகள் போடப்பட்டுள்ள போதிலும் அது பாதுகாப்பு அற்றது என்றும் புகையிரதப்பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி அப்பிரதேச மக்கள் கடுகதி புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.மகிந்த பிரதேச மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் மா.தியாகராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ். மயூரன் ஆகியோர் புகையிரத மறிப்பு போராட்டத்தில் கலந்து

கொண்டதுடன், பொதுமக்கள் மற்றும் பொலிசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக மூன்று ஊழியர்களை தாண்டிக்குளம் புகையிரதக்கடவையில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மறித்து வைத்திருந்த கடுகதி புகையிரதத்தை தொடர்ந்து பயணிக்க பிரதேச மக்கள் அனுமதி வழங்கினர்.

Leave a comment