அரசு எடுத்த முதல் நகர்வுக்கு சுமந்திரன் பாராட்டு

260 0

sumanthiran-720x480நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியென்றும் அவர் பாராட்டினார்.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதனை ஆதரித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

யுத்த காலத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். வெள்ளைவான் ‘கலாசாரம்’ என்பது தற்பொழுது இலங்கையின் சட்ட அகராதியில் ஒரு சொல்லாகப் பதிவாகிவிட்டது. அதிகாரத்தில் இருந்தவர்கள் அந்தளவுக்கு சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் உண்மையை கண்டறிவதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் விடயத்தில் இதனைவிட எதுவும் செய்யப்படவில்லை.

நீண்டகாலமாக காணாமல் போனவர்கள் பற்றிய உண்மை கண்டறியப்படவில்லை. 80களில் இடம்பெற்ற காணாமல் போதல்களுக்கு எதிராக தற்பொழுது இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ள அமைச்சரும், வாசுதேவ நாணயக்கார எம்பியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் ஜெனீவாவுக்குச் சென்றார்கள்.

மஹிந்த ராஜக்‌சவே இதில் முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார்.அதுமட்டுமல்லாது இது தொடர்பாக எடுத்துச் சென்ற ஆவணங்களை அதிகாரியொருவருக்கு வெளிப்படுத்தவும், வாக்குமூலமளிக்கவும் அவர் அப்போது மறுத்திருந்தார்.

தெற்கில் இளைஞர்கள் காணாமல் போன போதே இவர்கள் சர்வதேசத்திடம் சென்றார்கள். வாசுதேவவும் சிங்கள இளைஞர்கள் காணாமல் போன போதே ஜெனீவா சென்று குரல் எழுப்பினார்.

சிங்கள இளைஞர்கள் காணாமல் போனால் மட்டுந்தான் அவருக்கு மனித உரிமை மீறலா? அப்போது மட்டும்தான் அவர் மனித உரிமை ஆர்வலரா என்றும் சுமந்திரன் எம்பி கேள்வியெழுப்பினார்.

கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் உறவினர்கள் இன்னமும் அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் உண்மை கண்டறியப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.