”தமிழக அரசியல் நிலவரங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும், பிரதமரிடம் பேசினேன்,” என, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், டில்லி வந்திருந்தனர். இவர்களில், முதல்வர் மட்டும், அன்றே, சென்னை திரும்பிய நிலையில், பன்னீர்செல்வம் டில்லியிலேயே தங்கினார்; இது, அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு செல்ல, பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியானது. இருப்பினும், வடமாநிலங்களில் பெய்து வரும்பலத்த மழை காரணமாக, தன் பயணத்தை மாற்றிய பன்னீர்செல்வம், திடீரென மும்பை சென்று, அங்கிருந்து ஷீரடிக்கு சென்றார்.
இதற்கிடையில், பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்ததை அடுத்து, டில்லிக்கு மீண்டும் பன்னீர் செல்வம் திரும்பினார். நேற்று காலை, 11:00 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த அந்த சந்திப்புக்கு பின், நிருபர்களை பன்னீர்செல்வம் சந்தித்தார்.
எப்போதும் போல் இல்லாமல், மிகவும் சுருக்கமாக அவர் அளித்த பேட்டியில், ”தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, பிரதமரிடம் பல்வேறு கருத்துக்களை பேசினேன். தமிழக அரசின் நிலை குறித்தும், பிரதமரிடம் விரிவாக விளக்கினேன்,” என்றார்.
‘அணிகள் இணைப்பு குறித்து பேசினீர்களா’ என, கேட்டதற்கு, ”அனைத்து அம்சங்களையும் பேசினோம். நீங்கள் கேட்பது உங்களது யூகம். மற்றபடி, தொண்டர்களின் விருப்பப்படியே, எங்கள் முடிவு இருக்கும்,” என்றார்.அப்போது குறுக்கிட்ட, மைத்ரேயன், ”மற்றொரு கட்சியின் உட்கட்சி பிரச்னைகளில், பிரதமர் தலையிடுவது போன்ற கருத்துடன் அமைந்த
கேள்விகள் அர்த்தமற்றவை,” என்றார்.

