அ.தி.மு.க., அணிகள் இணைப்பு விரைவில் இறுதி வடிவம்: ஜெயகுமார்

385 0

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டு, செயல் வடிவம் பெற்றுள்ளது. அது, இறுதி வடிவம் பெற உள்ளது. விரைவில், நல்ல முடிவு எட்டப்படும்,” என, நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

டில்லியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்த பின், சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். எனவே, கட்சி ஒன்றுபடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெ., கட்டிக்காத்த இயக்கம், எந்த விதத்திலும் உடையக் கூடாது என்ற அக்கறையில், பிரதமர் கருத்து கூறினால், அது தவறில்லை. அதற்கு, உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

முதல்வர் குறித்து, தினகரன் கூறியது கண்டனத்திற்குரியது. ஆட்சி உட்பட எல்லா நலனையும் அனுபவித்து, மற்றவர்கள் மீதுசேற்றை வாரி வீசுவது, அவர்கள் மீதே சேற்றை வீசிக் கொள்வது போன்றது. தினகரன் நிதானமில்லாமல் பேசியுள்ளார். அவர் பேசியது,பக்குவப்பட்ட அரசியல்வாதி பேச்சல்ல.தினகரனை நீக்கும் தீர்மானத்தை படித்து பார்த்த பின் தான், அனைவரும் கையெழுத்திட்டனர். அதில், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக நீக்குவதாகக் கூறியுள்ளோம்.

முழுமையான அளவிற்கு, அந்த குடும்ப தலையீடு இல்லாமல், ஆட்சி நடத்துகிறோம். அவர்கள், அரசை கவிழ்க்க வேண்டும் என நினைத்தால், அது, ஜெ.,க்கு செய்யும் துரோகம். அவ்வாறு செய்தால், துரோகிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தமிழக மக்களும்மன்னிக்க மாட்டார்கள்.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறியபோது, ‘தேவைப்பட்டால் ஆதரிப்பது குறித்து யோசிப்போம்’ என, தினகரன் கூறியுள்ளார்.

இதை விட கொடுமையான செயல் வேறு இல்லை. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தை, முதல்வர் பழனிசாமி, மாவட்ட வாரியாக நடத்தி வருகிறார். சென்னையில், பிரதமர் தலைமையில், டிசம்பர் மாதம் நிறைவு விழா நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர்., வாரிசான நாங்கள், விழா கொண்டாட தகுதி படைத்தவர்கள். ஆனால், கட்சிக்காரர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக, தினகரன், மேலுாரில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு  செய்து உள்ளார்.

அவரது காழ்ப்புணர்ச்சியை, கட்சியினர் புரிந்து கொள்வர். ஜெ., இருந்த இடத்தில், யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Leave a comment