அம்மா வழியில் நடக்காவிட்டால் ஆட்சிக்கு ஆபத்துதான்: தினகரன்

1335 0

ஆட்சி அம்மா பாதையில் செல்லும்வரை ஆபத்தில்லை. இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரை மேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று பொதுக்கூட்டமாக இல்லாமல் பெரிய மாநாடாகவே நடத்த மதுரை மேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல இடையூறுகளை கடந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மதுரை மேலூரில் நடக்க இருக்கிறது.நான் நிர்வாகிகளை நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரத்தில் ஒன்றை கூறி விட்டு இங்கு பொய்யான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதுபோன்ற மோசடி செயலுக்கு ‘420’ என்று நான் கூறினேன். அப்போது பத்திரிகை நண்பர் ஒருவர், “நீங்கள் முதல்-அமைச்சரை பற்றி அப்படி கூறினீர்களா” என்று கேட்டார். அதற்கு நான் பதில் அளிக்கையில், “அந்த தீர்மானத்தில் கையெழுத்து போட்ட முதல்-அமைச்சர் உள்ளிட்ட 27 பேரின் செயல்பாடுக்கு மோசடி என்றுதான் அர்த்தம்” என நான் கூறினேன்.

அதற்கு முதல்-அமைச்சர் பதில் அளித்துள்ளார். முதல்-அமைச்சரை பார்த்து இப்படி கூறலாமா? என்று என்னிடம் யாராவது கேள்வி கேட்டால் அதற்கு எனக்கு பயம் இல்லை.பிப்ரவரி 14-ந்தேதி சசிகலா மற்றும் எங்களால் முதல்-அமைச்சராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைப் பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது.

ஏன்என்றால் 1987 முதல் அம்மாவுடன் சேர்ந்து பல எதிர்ப்புகளை சந்தித்து உள்ளோம். புரட்சித்தலைவி அம்மா, எம்.ஜி.ஆர்., அண்ணா, காமராஜர் ஆகியோர் அமர்ந்திருந்த பதவியில் தற்போது விபத்தின் காரணமாக அமர்ந்து இருக்கும் சூழ்நிலையில் அந்த பதவியின் மரியாதை கருதி நான் நேரிடையாக சொல்லவில்லை. அதைக் கூட அவர் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இன்று மீண்டும் என்னை அதுபோல் சொல்ல வைத்துள்ளார்.

இந்த இயக்கத்திலே திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி பழனிசாமி என்று ஒருவர் இருந்தார். தொட்டியம் பழனிசாமி என்று ஒருவர் இருந்தார். அது போல இப்போது ஒரு பழனிசாமி உருவாகி இருக்கிறார். அவர் யார் என்பதை இன்று மாலை பொதுக்கூட்டத்தில் கூறுவேன்.

தாலிக்கு தங்கம் வழங்குவதில் லஞ்சம் கேட்பதாக அமைச்சர் மீது வெற்றிவேல் குற்றம் சுமத்தி இருக்கிறார். அவர் மட்டுமல்ல பலரும் இதையே கூறுகிறார்கள். இந்த இயக்கத்தை வலுப்படுத்த நம்மால்தான் முடியும் என்று எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.

நமது எம்.ஜி.ஆர். நாளேடு சின்னம்மா மேற்பார்வையில் இருந்தது. இப்போது உறவினர் விவேக் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அந்த பத்திரிக்கையில் நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டனர். அந்த கருப்பு ஆடுகளை ‘களை’ எடுத்து விட்டோம்.

நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்துக்கு எதிராக கட்டுரைகள் வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.வை ஒன்று படுத்துவோம், நாங்கள் இரட்டைஇலை சின்னத்தை கண்டிப்பாக பெறுவோம். பாராளுமன்ற தேர்தலில் நமது இயக்க வேட்பாளர்கள் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

கட்சிக்காக பேசும்போது எங்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். சிலரின் செயல்பாட்டால்தான் நாங்கள் பதில்சொல்ல வேண்டி உள்ளது. அதையும் பெருந்தன்மையாக யாரையும் தாக்காமல் பதில் சொல்கிறோம். அதை எதிர் கொள்ள முடியாதவர்கள் பதிலுக்கு பேசுகிறார்கள்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், நடிகர் கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் கண்ணியத்துடன் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஒருமையில் பேசியிருக்க கூடாது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்கள். அதைப்போல் தான் அமைச்சர்களின் செயல்பாடு உள்ளது.

அம்மா இருந்தபோது, இவர்கள் எப்படி இருந்தார்கள். இப்போது எப்படி பேசுகிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும்.இன்று தறிகெட்ட நிலையில் உள்ளனர். அப்படி அடங்காமல் செல்லும் காளைகளை மூக்கனாங்கயிறு போட்டு அடக்குவோம்.இந்த ஆட்சி அம்மா பாதையில் செல்லும்வரை ஆபத்தில்லை. இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.

எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். முன்னாள் நண்பர்களால் இடையூறு ஏற்பட்டுள்ளது அதை விரைவில் சரிசெய்து விடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment