நாடு வளம் கொழிக்க தேசிய நதிகளை இணைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

290 0

நாடு வளம் கொழிக்க தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2 வருடமாக தமிழ்நாட்டில் வானம் பொய்த்துவிட்டதால் விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை கட்டமுடியாமலும், மேலும் விவசாயம் செய்ய முடியாமலும், வாழ்க்கையை நடத்த வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலமான கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, காவிரியில் நமக்கு முறையாக தரவேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. அதோடு சிறிதளவு வரும் தண்ணீரையும் தடுப்பணைக் கட்டி தடுக்க முயற்சி செய்கிறது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் என்றால் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். கடலில் கலக்கும் தண்ணீர் 25 சதவிகிதம் அனைத்து மாநிலங்களுக்கு கிடைத்தாலே இந்தியா விவசாயத்தில் வளம் கொழிக்கும் நாடாக மாறிவிடும்.

நதிநீர் இணைப்பிற்காக ஆகும் செலவு இத்திட்டம் நிறைவேறிய சில வருடங்களிலேயே அவற்றின் மூலம் வருமானத்தில் திரும்ப கிடைக்கும் என்பது நிச்சயம். நதிநீர் இணைப்பின் மூலம் நாட்டின் வளமும் அண்டை மாநிலத்தின் நட்புறவும் வளரும் என்பது ஐயமில்லை.

மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் நதிநீர் இணைப்பிற்காண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment