வடகொரிய விவகாரம்: ‘நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம்’ என டிரம்புக்கு சீன அதிபர் அறிவுறுத்தல்

234 0

வடகொரிய விவகாரத்தில் நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று ஆத்திரம் ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக கூறி அதற்கான திட்டத்தை வடகொரியா வெளியிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா பாதையை மாற்றிக்கொள்ளா விட்டால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டதாகவும், ஆயுதங்களும், தளவாடங்களும் லோடு ஏற்றியாகி விட்டதாகவும் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்றினார்.

இந்த நிலையில் வடகொரியாவின் ஆதரவு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங், இரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வார்த்தைகளையும், செயல்களையும் அமெரிக்காவும், வடகொரியாவும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்பை ஜின்பிங் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக சீன அரசு ஊடகம் கூறுகிறது.மேலும், சீனாவும், அமெரிக்காவும் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் இன்றி, அமைதி ஏற்படுத்துவதில் பொது நலன்களை பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்பிடம் ஜின்பிங் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதே போன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், டிரம்பும், ஜின்பிங்கும் நெருங்கிய உறவை பராமரிப்பதாகவும், அது வடகொரிய பிரச்சினையில் அமைதித்தீர்வு ஏற்பட வழிநடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment