காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

409 0

பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடலூர், நாகை மாட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு பிரசார பயணம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பிரசார குழுவினர் கடந்த 7-ந் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் பிரசாரம் செய்தனர்.

நேற்று மாலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகைக்கு வந்தனர். பின்னர் சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க அவைகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாம் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய ரசாயன மண்டலம் ஆகிய திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலிய ரசாயன மண்டல பணிகள் நாகை, கடலூர் மாவட்டங்களில் 47 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

இதனை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், கடலூர் மாவட்ட தலைவர் விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment