தெற்கு கடற்பிரதேசத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியமான எவன் காட் நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு மெரிடைம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதியை வழங்கிய காரணத்தினால் அரசாங்கத்திற்கு 11. 4 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரின் மீது தொடரப்பட்ட வழக்கு எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகுல உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிரான எழுத்துமூல சமர்ப்பணம் வழங்கப்பட்டதையடுத்து குற்றச்சாட்டுக்கான எழுத்துமூல சமர்ப்பணங்கள் 3.30 மணி முதல் எழுத்துமூலம் சமர்ப்பிப்பதற்கான காரியாலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்கான எழுத்துமூல சமர்ப்பணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் வழங்கப்படவில்லை என கருதி வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று அறிவிப்பதாக நீதிவான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் உதவிச் செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, முன்னாள் இராணுவ மேஜர் பாலித ஜயசிறி பிரணாந்து, அதிகாரி கொடவல, முன்னாள் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி ஜயநாத் குமாரசிறி கொலமபகே, முன்னாள் கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் எஸ்.எம்.பிரான்ஸிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

