மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய உற்சவ காலத்தின் துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக அடியார்கள் மாநகர சபையிடம் ஆதாரபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் மோட்டார் சைக்கிள்களிற்கு 10 ரூபாவிற்கு மேல் அறவிடக் கூடாது என மாநகரசபையால் அறிவித்திருந்தபோதும் பல பாதுகாப்பு நிலையங்கள் இன்றுவரையில் மோட்டார் சைக்கிளிற்கு 20 ரூபா அறவிடுவதுடன் தலைக் கவசத திற்கான கட்டணமும் தனித்து அறவிடப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறித்த விடயம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்து மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றுவரை 20 ரூபாவே அறவிடப்படுவதான சிட்டையுடன் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணம் 10 ரூபா மட்டுமே அவ்வாறு அச்சிடப்பட்ட சிட்டைகளிற்கு மட்டுமே மாநகரசபையும் றப்பர் முத்திரை பொறித்து வழங்கியுள்ளது. இருப்பினும் பல பாதுகாப்பு நிலையத்தவர்கள் அனுமதியின்றி 20 ரூபா சிட்டைகள் அச்சிட்டு எமது றப்பர் முத்திரை பொறிக்காது வழங்குவது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் . என்றார்.

