யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை விரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

306 0

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை நான் விரும்பவில்லை இதனால் அந்த இடத்தினை மன்னார் அல்லது முல்லைத்தீவிற்கு வழங்குமாறே நான் மீண்டும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வட மாகாண சபையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவை தொடர்பில் பல தரப்பட்ட கருத்தும் வெளிவரும் நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது அமைச்சுப் பதவியினை விலகும் எழுத்துமூல அறிவிப்பினை முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ளார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவாஜிலிங்கத்தினை முதலமைச்சர் அழைத்து சுகாதார அமைச்சினை சிரேஸ்ட உறுப்பினரே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் தற்போதைய நிலையில் வட மாகாண சபையின் 5 அமைச்சர்களில் 3 அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சூழலில் 4வது அமைச்சினையும் யாழ்ப்பாணத்திற்குள் ஏற்கும் மன நிலையில் நான் இல்லை. அவ்வாறு நான்காவது அமைச்சையும் யாழ்ப்பாணத்திற்குள் ஏற்று ஏனைய மாவட்ட மக்களிற்கு மனக் கசப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே ரெலோ கட்சி சார்பில் வழங்கப்படும் எந்த அமைச்சினையும் மன்னார் மாவட்டம் அல்லது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டினையே எதிர் வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்துவேன். என மேலும் தெரிவித்தார்.

Leave a comment