யாழ் குடாநாட்டின் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் 2017ம் ஆண்டிற்கான யாழ் முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி இன்று யாழ் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்திலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்து அவற்றிற்கு தகுந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இந்த மாபெரும் கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விற்பனை கண்காட்சியை இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக்கூடங்களையும் பார்வையிட்டு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
யாழ் மவாட்டத்திலிருந்து சுமார் 150ற்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் இந்த விற்பனைக்கண்காட்சி வலயத்தில் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் சுதீர ஜயரத்ன யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ரஞ்சிதமலர் மோகனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

