சுதந்திர தினத்துக்குள் அ.தி.மு.க. அணிகள் இணையும்: அமைச்சர் ஜெயக்குமார்

223 0

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், அ.தி.மு.க. அணிகள் சுதந்திர தினத்திற்குள் இணையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அ.தி.மு.க. அம்மா அணியையும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. அம்மா அணிக்குள் பிரச்சனை உருவானது. கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த டி.டி.வி. தினகரன் மீண்டும் கட்சிப் பணியை தொடங்கியதால், அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாக கூறிய டிடிவி தினகரன், கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், டி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் தலைமை கழக நிர்வாகிகள் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்தார். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் அணிகள் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “அ.தி.மு.க. இரு அணிகளும் சுதந்திர தினத்திற்குள் கண்டிப்பாக இணையும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

Leave a comment