முரசொலி பவளவிழா: முரசொலியை தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர் – வைரமுத்து

252 0

முரசொலி பத்திரிகையை தனது தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர்’ என முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கவிஞ்ர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகை தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக திகழ்கிறது. முரசொலி தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த வாழ்த்தரங்கில் பல்வேறு நாளிதழ் மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்த்தரங்கில் பேசிய கவிஞர் வைரமுத்து, “பத்திரிகையை பாராட்ட பத்திரிகையாளர்களை அழைத்தது சரியான முடிவு. திருமணத்துக்கு பத்திரிகை அடிக்க வேண்டிய வயதில் திராவிடத்துக்கு பத்திரிகை அடித்தவர் கலைஞர். முரசொலியை தனது தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர். எமர்ஜென்சியின் போது முரசொலியை திறம்பட வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர். முரசொலியும் ஒரு பீனிக்ஸ் பறவை தான்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment