மு.க.ஸ்டாலினுக்கு என்மீது காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்: அமைச்சர் விஜயபாஸ்கர்

11602 0

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மீது காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத ஒன்று என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியலில் எதிர்கட்சியினர் ஆளும்கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய டெங்கு காய்ச்சல் குறித்து கூறிவரும் கருத்துக்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்பதை அவருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டினை சுகாதாரக் குறியீடுகளை கொண்டு மட்டுமே அளவீடு செய்ய முடியும். இந்திய அளவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையானது சுகாதாரக் குறியீடுகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

தொற்று மற்றும் தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பொதுவாக இயற்கை பேரிடர் காலங்களில் பேரிடருக்குப் பின்பு தொற்று நோய் ஏற்படும் என்ற நிலையை மாற்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து மழை வெள்ளத்தால் ஏற்படும் தொற்றுநோய் அறவே இல்லை என்ற நிலையை எட்டி உலக வரலாற்றில் அளப்பரிய சாதனையை புரிந்துள்ளது.

இப்படி மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாதனைகள் எண்ணிலடங்கா. ஏற்கனவே நான் பல முறை தெளிவுபடுத்தியும் கூட, “காமாலை கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது போன்ற நல்ல விஷயங்கள் எல்லாம் கண்களுக்கு தெரியாமல் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் செய்வதை மட்டுமே வாடிக்கையாகவும் குறை சொல்வதை மட்டுமே கொள்கையாகவும் வைத்திருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன்.

அரசு எடுத்து வருகின்ற தொடர் நடவடிக்கைகளினால் டெங்கு காய்ச்சல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒன்று, வெளியே ஒன்று எனப் பேசுவது தி.மு.க.வினருக்கு வாடிக்கை. ஆனால் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரே கருத்தை தெரிவித்து வருவது அ.தி.மு.க.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பன்றிக்காய்ச்சலால் ஏற்பட்ட அச்சுறுத்தலை மிகச் சிறப்பாக கையாண்டு மக்களை காப்பாற்றியது மக்கள் நல்வாழ்வுத்துறைதான். மேலும் உலக அளவில் ஜிகா வைரஸ் இருந்தபோதும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு இருப்பதை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கண்டறிந்து மேலும் பரவாமல் தடுத்ததும் மக்கள் நல்வாழ்வுத் துறைதான்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, இரத்த கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு தொடர்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகளை அறியாதவர் போல, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விட்டது என்று நினைத்துக் கொள்ளும் என்ற வகையில் உண்மைக்கு மாறான ஒரு வெற்று அறிக்கையை வெளியிடும் பொறுப்பான பதவியில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் பொறுப்பற்ற செயல் கண்டனத்திற்குரியது.

டெங்கு போன்ற எந்தக்காய்ச்சலையும் கட்டுப்படுத்தி ஓட ஓட விரட்டச்செய்யும் வல்லமை அரசுக்கு உண்டு. ஆனால் எதிர்கட்சித் தலைவருக்கு என்மீது ஏற்பட்டுள்ள “காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்” எந்த மருந்தாலும் குணப்படுத்தமுடியாத ஒன்று. எனவே, எதிர்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளியிட்டு வரும் அறிக்கைகள் மூலம் களத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களின் தன்னலமற்ற சிறப்பான சேவையை கொச்சைப்படுத்திட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment