ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தானே? – பொதுமக்களிடம் நவாஸ் ஷெரீப் கேள்வி

293 0

பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கால் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப், பேரணியில் பேசும்போது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தானே? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு மற்றும் பணம் பதுக்கல் செய்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஆவணங்களில் குற்றம்சாட்டப்பட்டது. இதன் மீதான வழக்கின் தீர்ப்பில் அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக கடந்த வாரம் அப்பாஸி பதவியேற்றார்.

இதற்கிடையே, பதவி பறிபோன பின்னர் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் வாகன பேரணியை தொடங்கினார். இஸ்லாமாபாத்
நகரிலிருந்து நேற்று தொடங்கிய இந்த பேரணி, 380 கிலோ மீட்டர்கள் கடந்து லாகூரில் முடிவடைகிறது.

இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீப்புக்கு, கட்சித் தொண்டர்கள் வழி நெடுகிலும் அவரது கார் மீது பூக்களை தூவினர்.

இந்நிலையில், பேரணியின் தொடக்கத்தில் நவாஸ் ஷெரீப் பேசுகையில், ‘இந்த நாட்டில் பதவியேற்கும் ஒவ்வொரு பிரதமரும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரையில்தான் பதவியில் இருக்கின்றனர். அதில் சிலருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிலருக்கு சிறைவாசம் அளிக்கப்படுகிறது. சிலர் நாடு கடத்தப்படுகின்றனர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் பிரதமரை எங்களை தவிர வேறு யாருக்கும் நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது என நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் உங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

எனக்கு இதுபோல் 3-வது முறையாக நிகழ்ந்துள்ளது. இது நீங்கள் எனக்கு அளித்த வாக்குகளை அவமானப்படுத்துவதாக இல்லையா?

இந்த பேரணி முடிந்து நான் வீட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனாலும், பாகிஸ்தானின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த எனது எண்ணங்களுக்கு நீங்கள் எப்போதும் துணையாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a comment