டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடம் இல்லை: சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டம்

322 0

டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் இந்தியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என சீனா மிரட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மாதங்களாக அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே டோக்லாம் பகுதியில் பூடான் சார்பில் இந்தியா நுழைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள சீனா, இதைப்போல காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பில் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. எனவே டோக்லாம் விவகாரம் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாக புகைந்து வருகிறது.

இந்த நிலையில் சீன ராணுவ நிபுணர்கள் மற்றும் தெற்கு ஆசிய அரசியல் வல்லுனர்கள் நேற்று பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்திய பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்த அந்த சந்திப்பில் பேசிய அவர்கள், டோக்லாம் பகுதி இந்தியாவுக்கு சொந்தமில்லாத நிலையில் அங்கு இந்தியா மேற்கொண்டுள்ள அபாயகரமான நடவடிக்கை சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஸோ போ கூறுகையில், ‘சீனா ‘ஆக்கிரமிப்பு’ என்ற வார்த்தையை கூட இதுவரை பயன்படுத்தியதில்லை. ‘அத்துமீறல்’, ‘ஊடுருவல்’ போன்ற வார்த்தைகளைதான் நாங்கள் பயன்படுத்துகிறோம். இதுதான் சீனாவின் நல்லெண்ணம். டோக்லாம் விவகாரத்தில் நல்லதே நடக்கும் என நம்புகிறோம்’ என்றார்.

இந்த விவகாரத்தில் எந்தவொரு சமரசத்துக்கும் சீன அரசும், ராணுவமும் தயாரில்லை எனக்கூறிய ஸோ போ, இருநாட்டு மக்களின் நலன் மற்றும் நல்லுறவை கருத்தில் கொண்டு எந்தவொரு நிபந்தனையுமின்றி இந்தியா படைகளை நிச்சயம் வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதே கருத்தை எதிரொலித்த மற்றொரு மூத்த அதிகாரியும், ராணுவ அறிவியல் அகாடமியின் சீனா-அமெரிக்க பாதுகாப்பு உறவுகளுக்கான இயக்குனருமான ஸாவோ ஜியாஸோ, டோக்லாம் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் என்றால், இந்தியப்படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும், இல்லையென்றால் படைகள் மூலமே இந்த பிரச்சினை தீர்க் கப்படும் எனவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் எங்களின் நண்பன். அந்த பாகிஸ்தானுக்காக இந்திய எல்லைக்குள்ளோ அல்லது இந்தியா-சீனா எல்லை வழியாகவோ நாங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் உங்கள் (இந்தியா) எதிர்வினை எப்படி இருக்கும்? என எனக்கு தெரியவில்லை’ என்றார்.

இதைப்போல முச்சந்திப்பு விவகாரங்களை ஒரு சாக்காக இந்தியா எடுத்திருப்பதாக குற்றம்சாட்டிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லைகள் மற்றும் கடல்சார் நலன்களுக்கான துணை இயக்குனர் வாங் வென்லி, இதைப்போல இந்தியா-நேபாளம்-சீனா இடையிலான கலாபனி சந்திப்பு அல்லது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் நாங்களும் தலையிட்டால் என்ன செய்வீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் நம்பிக்கையை வெகுவாக பாதித்து இருப்பதாக கூறிய சீன வல்லுனர்கள், சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்தியா வைத்திருக்கும் தவறான கணிப்புக்கு தகுந்த விளைவுகளை இந்தியா அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இதற்கிடையே டோக்லாம் எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடு படுவதாக அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியா வந்து திரும்பிய அவர், இது தொடர்பாக கூறுகையில், ‘டோக்லாம் பீடபூமியில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளன. அங்கு தற்போது நிலவி வரும் பிரச்சினைக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே காரணம் என நான் நம்புகிறேன். இந்த பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணவேண்டும். அது நடைபெறும் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே சுமார் 2 மாதங்களாக நீடித்து வரும் டோக்லாம் பிரச்சினையில் அமெரிக்கா தொடர்ந்து மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment