பிரான்சில் நடைபெற்ற ‘நிழலாடும் நினைவுகள்’ நூல்வெளியீடு

4849 0

புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் இரு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் திரு. யோகச்சந்திரன் அவர்கள் ஒரு வளர்ந்து வரும் ஆற்றல் நிறைந்த எழுத்தாளர். இவர் தனது இரண்டாவது நூல்ப்படைப்பாக பிரான்சில் நடைபெற்ற நூல்வெளியீடு ‘நிழலாடும் நினைவுகள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வினை கடந்த 05.08.2017 சனிக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான வில்பரி பிரதேசத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மாலை 18.00 மணிக்கு ஒரு நிகழ்வாக நடாத்தியிருந்தார்.

இப் புத்தகத்தின் வெளியீட்டு மதிப்புரையை நடாத்திய மூத்த கவிஞரும், எழுத்தாளரும், கதை ஆசிரியருமாகிய திரு. வண்ணை தெய்வம் அவர்கள் நெறிப்படுத்த அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இப் புத்தகத்தில் அடக்கப்பட்ட கதையும் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள் பற்றியும் திரு. வண்ணை தெய்வம் அவர்கள் தொகுத்து கூறியிருந்தார். இதில் கருத்துரைகளை வழங்கிய மூத்த பன்முகக்கலைஞர் திரு தயாநிதி அவர்கள் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் காலத்தின் ஒட்டத்தில் எமது வாழ்வும், இன்று வாசிப்புத் தன்மைகளும், எழுத்தாற்றல்களும் குறைந்தும் சோர்வுற்றும் செல்கின்ற காலத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் பல்வேறு சுமைகளுக்கு மத்தியில் எந்த லாபத்தையும், எதிர்பார்க்காமல் உண்மைகளையும் மனதிலுள்ள பசுமையான நினைவுகளையும் எழுதியதோடு மாத்திரம் நின்று விடாது அதனை மற்றவர்களும் அறியவேண்டும் என்ற நோக்கோடு இவர் எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எடுத்திருக்கும் இவரின் இரண்டாவது புத்தக வெளியீட்டினை மகிழ்வுடன் வாழ்த்தியுமிருந்தார்.

புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழுத்தாளாரின் வாழ்வில் தனது கண்முன்னே பல்வேறு சமூக அடக்கு முறைக்கலாச்சாரத்தில் வாழ்ந்து அரைநூற்றாண்டு மேலாக சந்தோசமாக தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஓர் மூத்த குடும்பத்தினர் வெளியிட்டு வைக்க எழுத்தாளரின் நண்பர்கள் பொற்றுக் கொண்டனர். இன்னும் முக்கியமானவர்கள் புத்தக வெளியீட்டில் உரையாற்றினர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு. மேத்தா அவர்கள் புத்தகத்தினை பெற்றுக்கொண்டதோடு உரையும் ஆற்றியிருந்தார்.

எழுத்தாளர் புத்தகத்தில் தனது அகத்தில் உள்ளதை புறத்தில் எழுத்து வடிவாகக் கொண்டு வந்துள்ளார் என்றும் தாயகத்தில் இவர் வாழந்த காலத்தில் இனத்தின் விடிவிற்கான தமிழர்கள் வரித்துக் கொண்ட உயிர் அர்ப்பணிப்பு மிக்க விடுதலைப்போரில் தானும் ஒர்பங்காளனாகிப் போனதும் இதனால் தனது வாழ்க்கைத்துணைவியும் விரும்பி ஏற்றுக்கொண்ட சொல்லெண்ணா துன்பத்தையும் கொஞ்சமே தான் இப்புத்தகத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கின்றார் போல் உள்ளது என்றும் ஆனால் இவரின் மனதில் ஆறாத மறையாது மறைத்து வைத்திருக்கும் அத்தனை உண்மைகளும், ஆறாத பெரும் வலிகளையும் அடுத்த சந்ததிகள் அறியும் வகையில் வகை செய்ய வேண்டும் இந்த வரலாற்றுக் கடமைப்பாடு எல்லோருக்கும் உண்டு என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

புத்தக எழுத்தாளர் தனது கருத்துரையில் நூலில் உள்ளடக்கப்பட்ட சமர்ப்பணம் முதற்கொண்டு எழுத்தப்பட்ட பத்து விடயங்களும் எல்லாமே கதையல்ல அனைத்து நிஐம் என்பதையும் சொல்லியிருந்தார். இதில் வரும் சில நேரடிச்சாட்சிகளையும் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்ததோடு மட்டுமல்லாது அவர்களையும் மதிப்பளிப்பும் செய்திருந்தார். இனி தனது அடுத்த வெளியீடாக மண்பற்றுக் கொண்டு அதற்காகன உச்சதியாகம் செய்த மண்ணின் புதல்வர்கள் பற்றியும் அவர்களுடன் பழகிய வாழ்க்கை வரலாற்றையும் எழுத்தில் கொண்டு வரவுள்ளதையும் சொல்லியிருந்தார்.

தன்னை எழுதத் தூண்டிய தனது துணைவியாரையும், மற்றவர்களையும் நன்றியோடு கரம்பற்றுவதாகவும் கூறியிருந்தார். தனது இந்த முயற்ச்சிக்கு தொடர்ந்தும் எல்லோரும் கைகொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோடைகால விடுமுறையான போதும் தனது அழைப்பையேற்று கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நண்பர்கள் சமூக நலன்விரும்பிகள் கலந்து கொண்டதோடு புத்தகத்தினையும் பெற்றுக்கொண்டனர். இறுதியில் விருந்தோம்பலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. திரு. யோகச்சந்திரன் அவர்கள் பிரான்சின் 93 தமிழர் விளையாட்டுக்கழகத்தின் முன்னைநாள் தலைவராகவும், தற்போது ஆலோசகராகவும் இருந்து வருகின்றார் என்பதும் இவரின் மூத்த புதல்வன் பிரான்சு நாட்டின் தேசிய கூடைப்பந்தாட்டத்தின் சிறந்த நடுவரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் மீதும் அந்த விடுதலையின்பாலும் பற்றும் நம்பிக்கையும் பங்காளிகளாகவும் இருந்த இவர் போன்றவர்களுpன் எண்ணங்களும், எழுத்துக்களும் இன்றைய காலஒட்டத்திலும், அடுத்து வரும் எமது புதிய பரம்பரையினருக்கும் தேவையானதும் அவசியமானதுமாகும் உண்மையின் வரலாற்றுப் பதிவுகளை தமிழர் சரித்திரத்தில் இடம்பெறச் செய்ய வேண்டிய கடமை அனைத்து புலத்துத் தமிழர்களுக்கும் உண்டு இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி எமது மொழிக்கும், மண்ணுக்கும், இனத்திற்கும் பலம் சேர்ப்போம். சிறிய நிகழ்வாக இருந்தாலும் காத்திரமானதொரு நிகழ்வாக இது இருந்ததை காணக்கூடியதாக இருந்து.
நன்றி பிரான்சு ( ஊடக இல்லம்)

Leave a comment