இன்று (8) மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியன ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தன.
போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், எஸ்.சைதன், கடந்த முறை வடமாகாண சபையில் போட்டியிட்ட தம்பிராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, மீனவ அமைப்பு மற்றும் அகில இலங்கை ஆசிரியர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
“மக்கள் நிலங்களில் இருந்து இராணுவமே வெளியேறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தடை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், எங்கள் பிள்ளைகளை பயங்கரவாதி ஆக்காதே” போன்ற கோசங்களை எழுப்பிக்கொண்டு குறித்த போராட்டம் நடைபெற்றது.

