சிலர் வீட்டில் இருந்துகொண்டே முகநூல் மூலம் புரட்சி செய்ய முயற்சிக்கின்றனர்!

355 0

இன்றைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் விளையாட்டுத் துறையில் சிறுவர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கணணியிலும், கைத்தொலைபேசியிலும், வீடியோ விளையாட்டுக்களிலும் உட்கார்ந்த இடத்திலேயே அவர்கள் பொழுதை கழிப்பதனால் உற்சாகம் குறைந்தவர்களாகும் அபாயம் உள்ளது.

எனவே அவர்களை மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சிறுவர்களுக்கான எறிபந்து விளையாட்டுப் போட்டி தேசிய மட்ட போட்டியாக நடைபெறும் இந்தத் தருணத்தில் தேசிய தொலைக்காட்சியைத் தவிர வேறு ஊடகங்களிலும் அந்த போட்டிகளை காணக்கிடைக்காமை வருத்தமளிக்கிறது.

விளையாட்டுத்துறையில் சிறுவர்களை ஊக்குவிக்க ஊடகங்கள் முன்வரவேண்டும்.

பதின்மூன்று வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான தேசிய எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை எறிபந்து விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் பூரண அணுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கரப்பந்தாட்டத்திற்கான முன்னோட்ட போட்டியாகக் எறிபந்து விளையாட்டினைக் கொள்ளமுடியும். அது இந்தியாவின் குறிப்பாக சென்னைப் பிரதேசத்திலேயே முதன் முதலில் விளையாடப்பட்டு இன்று ஆசிய மட்டத்தில் பிரபலமாக விளையாடும் விளையாட்டாக உள்ளது.

மலையக மக்கள் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற வகையில் அவர்களது பாரம்பரியத்தில் உருவான விளையாட்டின் தேசிய மட்டப்போட்டிகள் மலையகப் பகுதியான நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் மைதானத்தில் இடம்பெறுவது சிறப்பு. யாருக்கும் பயனற்று கிடந்த நோர்வூட் மைதானத்தை திறந்து விட்டுள்ளோம்.

மலையகப் பாடசாலைகளும் போட்டிகளில் பங்குற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன.

இன்றைய உலகம் தகவல் தொழிநுட்ப யுகத்தின் உச்சத்தில் உள்ளது. பெரியோர் பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் முழுமையாக உள்வாங்கப்பட்டவர்களாகி வருகின்றனர்.

கருத்துக்களும் விமர்சனங்களும் கண்டனங்களும் என எல்லாமே முகநூல் மயமாகிவிட்டது. வீட்டில் படுத்துக்கொண்டே புரட்சிகளும் கூட செய்கிறார்கள்.

சிறியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும்இ ஒரு தேசியவிளையாட்டு விழா. ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியர் போட்டிகளிலே பங்கேற்கின்றனர்.

எனவே இத்தகைய தேசிய மட்ட போட்டி நிகழ்வொன்றில் பங்குபற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் இங்கே தேசிய தொலைக்காட்சியைத் தவிர வேறு ஊடகங்களை என்னால் காண முடியாதுள்ளது. அரசியல்வாதிகளின் குறைகளை தேடுவதற்கு இரண்டு மூன்று கெமராக்களுடன் வரும் சில ஊடகங்கள் எமது வருங்கால சந்ததியினரான இந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்ட அறவே அக்கறையற்று இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த தகவல் யுகத்தில் சிறுவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்க ஊடகங்கள் முன்வருதல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment