வடகொரியாவிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் – அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா வலியுறுத்தல் 

182 0

வடகொரியாவிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் – அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன வலியுறுத்தல் விடுத்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியானில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெற்ற பிராந்திய பாதுகாப்பு கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்றது.

இதில் ஏசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் நிறைவடைந்ததும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment