எல்லையில் மோதலை தவிர்க்க இந்திய படையினரை வாபஸ் பெற வேண்டும்: சீன ராணுவம்

365 0

சிக்கிம் எல்லையில் மோதலை தவிர்க்க இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சீன ராணுவம் கூறுகிறது.

சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் எல்லைகளின் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது. இதில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

“இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும்” என இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. “சீன ராணுவம் அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது, வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும்” என இந்தியா அஞ்சுகிறது.

சீனாவின் நடவடிக்கைக்கு பூடானும் எதிர்ப்பு தெரிவித்தது. 

எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா, தனது ராணுவத்தை குவித்தது. இந்தியாவும் படைவீரர்களை குவித்தது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சீன அரசு, இந்திய பத்திரிகையாளர்களை சீனாவுக்கு அழைத்தது. ஆனால் அவர்களின் சீனப்பயணத்தையும், தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை.

பீஜிங் அருகேயுள்ள ஹூரைராவு ராணுவ பயிற்சி முகாமுக்கு இந்திய பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற சீன அரசு, அங்கு தனது ராணுவ பலத்தை பறை சாற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியது.

அப்போது சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி லி கூறியதாவது:- 

இந்திய ராணுவத்தினர் செய்தது, சீன எல்லையை ஆக்கிரமிப்பு செய்ததுதான்.

சீன சிப்பாய்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் அங்கே (இந்தியாவுக்கு) போய் சொல்லுங்கள். நான் ஒரு போர் வீரர். பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்காக என்னால் இயன்ற சிறப்பானதை செய்ய முயற்சிப்பேன். எங்களிடம் தீர்வு இருக்கிறது. உறுதிப்பாடும் உள்ளது.

எனவே மோதலை தவிர்ப்பதற்கு, இந்திய படையினரை திரும்பப்பெற வேண்டும்.
இங்கே நாங்கள் செய்து காட்டியதற்கும், டோக்லாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

டோக்லாமில் தற்போதைய மோதல் போக்கு குறித்த கேள்விக்கு லி லி பதில் அளித்தார். 

அப்போது அவர், “இந்திய தரப்பு என்ன நடவடிக்கைகள் எடுக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் சீன ராணுவம் நடவடிக்கை எடுக்கும். தேவைப்படும்போது, நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். நாங்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியின் உத்தரவை, மத்திய ராணுவ ஆணைய உத்தரவை ஏற்று செயல்படுத்துவோம்” என்று கூறினார்.

சீன அரசின் அதிகாரபூர்வ நாளேடு ‘சீனா டெய்லி’, இந்தியாவுக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

எல்லையில் நிலவுகிற மோதல் போக்கு பற்றி அது குறிப்பிடுகையில் “இந்திய படையினர் அத்துமீறி நுழைந்திருப்பது, சீனா எதிர்பார்க்காத ஒன்று. இரு தரப்புடனும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்ட எல்லையில் உள்ள ஒரு பகுதியினுள் அத்துமீறியது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறி உள்ளது.

மேலும், “இந்தியாவின் அத்துமீறல், சீனாவின் பிராந்திய இறையாண்மையின் மீறலுக்கு குறைவானதல்ல. சீனா தனது பிராந்தியத்தை காப்பதற்கு என்ன நடவடிக்கை தேவையோ, அதை எடுக்கிற சட்டப்பூர்வ உரிமையை கொண்டிருக்கிறது. அண்டை நாடுகள் இடையேயான மன வேற்றுமை, புரிந்துகொள்ளக்கூடியதுதான். இந்தியா நேர்மையான பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். சட்டவிரோதமான, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.

Leave a comment