தீர்ப்புக்கு முன்பாகவே தகுதி நீக்க முடிவு எடுக்கப்பட்டுவிட்டது: நவாஸ் ஷெரீப்

336 0

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தன்னை தகுதி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் குற்றவாளி என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 28-ம் தேதி தீர்ப்பு அறிவித்தது. இதனால், பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை தேசிய நம்பகத்தன்மை குழு விசாரணை செய்து 6 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்திற்கு நேர்மையற்ற தகவல்களை தெரிவித்ததால் பிரதமர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தகுதியில்லை எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசியலில் குழப்பமான சூழல் நீடித்து வருகின்றது. இருப்பினும் நவாஸ் ஷெரீப் அதனை லாவகமாக கையாண்டு வருதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தன்னை தகுதி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷெரீப், “முடிவு எடுக்கப்பட்ட பின்னர் வெறும் தீர்ப்பு மட்டும் வாசிக்கப்பட்டது. என்னை பதவி நீக்கம் செய்வதற்காக நீதிமன்றம் கூறிய காரணங்கள் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த தீர்ப்பு குறித்து நாட்டில் மாபெரும் விவாதம் நடைபெற்று வருகிறது” என்றார்.

Leave a comment