நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகின்ற ஆகஸ்ட் 23-ம் தேதி இந்தியா வருகிறார்.
நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்-சென்டர்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இடையிலான அதிகார பகிர்வு ஒப்பந்தத்தின்படி, பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தனது பதவியை கடந்த மாதம் மே மாதம் 24-ம் தேதி ராஜினாமா செய்தார். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா, புதிய பிரதமராக பதவியேற்றார்.
நேபாள பிரதமராக பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஷேர் பகதூர் தியூபா வருகின்ற ஆகஸ்ட் 23-ம் தேதி இந்தியா வருகிறார்.
தியூபாவின் 5 நாள் சுற்றுப் பயணத்தின் நோக்கம் குறித்து நேபாள துணை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து, நிலநடுக்கத்துக்கு பிந்தைய மறுசீரமைப்பு பணிகள் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு குறித்து இந்த பயணத்தின் போது ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

