மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: கர்நாடக விவசாய மந்திரி சென்னையில் பேட்டி

235 0

மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அம்மாநில விவசாய மந்திரி கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.

காவிரி நீரை பங்கிட்டுகொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இதுதொடர்பாக தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. நடுவர் மன்றம் தெரிவித்தபடி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமும் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே காவிரியில் நமக்கு தற்போது கிடைத்து வரும் தண்ணீரையும் பறிக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டி வருகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடமும் தமிழக அரசு தொடர்ந்து முறையிட்டு உள்ளது. என்றபோதிலும் கர்நாடக அரசு அணைகட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது. சென்னைக்கு வந்த கர்நாடக விவசாய மந்திரி கிருஷ்ணபைரே கவுடாவும் இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றும், கர்நாடகத்தில் வறட்சி ஏற்பட்டதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவதால் 2 மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும். இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை நாங்கள் திறந்து விடுவோம். தற்போதைய சூழ்நிலையில் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் இதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, ‘இது கண்டிப்பாக நடக்காது. கர்நாடகாவில் இனி ஒருபோதும் பாரதீய ஜனதா ஆட்சி இடம் பெறாது’ என்று பதில் அளித்தார்.

Leave a comment