அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த நான் தயார்: அன்புமணி ராமதாஸ் சவால்

249 0

இடம் மற்றும் தேதியை அறிவித்தால் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த தயார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

இடம் மற்றும் தேதியை அறிவித்தால் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த தயார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், அது குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். அவரது துணிச்சலை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் துறை என்றால் அது பள்ளிக்கல்வித் துறை தான். பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக நேர்மையான அதிகாரியான உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு தான் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன.

இதையடுத்து இப்பள்ளிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என 1,900 பணியிடங்கள், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 150 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என 2,950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி தானே நிரப்பியிருக்க வேண்டும்?.

அதைவிடுத்து கலந்தாய்வு நடத்தாமல் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் ஆளுங் கட்சியினரும், அமைச்சர் செங்கோட்டையன் கைகாட்டியவர்களுக்கும் இடமாற்ற ஆணை வழங்கியது விதிமீறலா, இல்லையா? இதற்கு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தாரா, இல்லையா?.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் மட்டும் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அதிகாரம் இருந்த நிலையில், அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டதா, இல்லையா?. இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத் தன்மை எள்ளளவாவது கடைப்பிடிக்கப்பட்டதா? என்பதை வெளிப்படைத்தன்மையின் அடையாளமாக திகழும் செங்கோட்டையன் கூற வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி அண்மைக் காலங்களில் பா.ம.க. முன்வைத்த அனைத்துக் குற்றச்சாற்றுகளையும் மறுஉறுதி செய்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

விவாதத்தை மக்கள் நேரடியாக பார்த்து மதிப்பீடு செய்துகொள்ள வசதியாக விவாதம் செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது நிபந்தனையாகும். இதை ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்துவதற்கான இடம் மற்றும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தால் அந்த தேதியில் அவருடன் விவாதம் நடத்த நான் தயார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment