வடகொரியாவுக்கு சீனா அன்பு கட்டளை

196 0
வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தடைகள் மட்டுமே இறுதித் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.
குறிப்பாக கடந்த மாதத்தில் மாத்திரம் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது.
இதனையடுத்து, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கும் வரைவு அறிக்கையை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புதல் அளித்தது.
2006ஆம் ஆண்டுக்குப் பின் வடகொரியா மீது கொண்டு வரப்படும் 7வது தடை தீர்மானமாக இது அமைந்தது.
ஐக்கிய நாடுகள் சபை கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், அணு மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி கொள்ளுங்கள் என்று வடகொரியாவுக்கு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவும், தென் கொரியாவும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது எனவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment