இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் மணிஷ் ஷா மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் ரோம்போர்டு பகுதியில் புருனல் குளோஸ் என்ற இடத்தில் வசித்து வருபவர் டாக்டர் மணிஷ் ஷா (வயது 47). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.தற்போது டாக்டர் மணிஷ் ஷா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் வரும் 31-ந் தேதி அங்கு பார்க்கிங்சைடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2004-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும், 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடையே நடந்துள்ளதாகவும், இவரால் 54 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் லண்டன் மாநகர போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
2013-ம் ஆண்டு முதன்முதலாக கைது செய்யப்பட்ட டாக்டர் மணிஷ் ஷா, பல முறை ஜாமீன் பெற்றுள்ளதும், நீண்டதொரு விசாரணைக்கு பின்னர்தான் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

