‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவியை விட்டு விலகினார்.
நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது 6 வாரங்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; இந்த வழக்கு விசாரணையை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் நவாஸ் ஷெரீப்பை அரசியல் சாசனம் பிரிவு 62 (1)(எப்) படி தகுதி நீக்கம் செய்தது அர்த்தமற்றது என நவாஸ் ஷெரீப் வக்கீல்கள் குழு கருதுகிறது.
இந்த தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கையில் மூத்த வக்கீல் கவாஜா ஹாரிஸ் ஈடுபட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைத்த 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய பாகிஸ்தான் சட்டத்தில் இடம் உள்ளது.
இதுபற்றி மூத்த வக்கீல் கவாஜா ஹாரிஸ் குறிப்பிடுகையில், “அரசியல் சாசனம் பிரிவு 184 (3) படியும்கூட ஒரு மனு தாக்கல் செய்ய முடியும். இது சுப்ரீம் கோர்ட்டு முழு அமர்வு அமைத்து விசாரிக்க வகை செய்யும்” என்று கூறினார்.

